Skip to main content
All Essays5 min read
Research Essay

Thani Nayagam Who Nurtured Tamil

Thani Nayagam Who Nurtured Tamil

A research essay chronicling Father Thani Nayagam's worldwide service to Tamil, founding of the International Association for Tamil Research (IATR), launching of 'Tamil Culture', and recovery of early Tamil printed books.

உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இன்று தமிழ் கற்பிக்கப்படுகிறது; தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகத் தமிழ் மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத எத்தனையோ பிற நாட்டு அறிஞர்கள் இன்று தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் காரணகர்த்தா யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சேவியர் தனிநாயகம் அடிகளார் ஆவார்.

மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் 1961-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த அடிகளார், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 26.07.1963 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அடிகளார், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியர்களை ஒன்று கூட்டி, ஆண்டுதோறும் உலக அளவில் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோற்றம்

1964 ஜனவரி 6-ம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை தில்லியில் உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட தமிழறிஞர்களை ஒன்று கூட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினை அமைக்க அடிகளார் திட்டமிட்டார். அவ்வமைப்புக் கூட்டத்தில் பேராசிரியர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார், அ. சிதம்பரநாதன் செட்டியார், வி.ஐ.சுப்பிரமணியம், ஜீன்.ஃபிலியோசா, தாமஸ் பர்ரோ, கமில் சுவலபில், டாக்டர் ஆர்.இ.ஆஷர் போன்ற பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைத்துப் பணிபுரிய வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அடிகளாரும் கமில் சுவலபிலும் வலியுறுத்திப் பேசியபின் மன்றம் அமைக்கப்பட்டது. இம்மன்றமே கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாடு தொடங்கி எல்லா மாநாடுகளையும் நடத்தி வருகிறது. முதல் உலகத் தமிழ் மாநாட்டைத் தனிநாயகம் அடிகளார் தனியொருவராகவே முன்னின்று நடத்தினார் எனலாம்.

தமிழ் பயின்ற வரலாறு

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரே ஆயினும் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், உரோமையிலும் பயின்ற போதெல்லாம் தமிழைக் கற்றுக்கொள்வதில் அடிகளாருக்கு ஆர்வம் இல்லை. ஐரோப்பிய மொழிகளைக் கற்றுத் தேர்வதில்தான் அவர் அவ்வமயம் தனிக் கவனம் செலுத்தினார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன்குளத்தில் 1941-முதல் அவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில், தமது சமயப்பணியைச் செவ்வனே ஆற்றுவதற்காகத் தமிழ் கற்க முற்பட்டார். அவ்வமயம் சங்க இலக்கியத்தின் சிறப்பு அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலமுடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 32.

பல்கலைக்கழகத்தில் அன்று தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், சிதம்பரநாதன் செட்டியாரும் தமிழ் ஆய்வில் ஈடுபட அடிகளாரைப் பெரிதும் ஊக்குவித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் நான்கு ஆண்டு காலம் பயின்று தமிழ் முதுகலை, இலக்கிய முதுகலை ஆகிய இரு பட்டங்களையும் பெற்றார். இலக்கிய முதுகலைப் (எம்.லிட்.) பட்டத்துக்காகப் "பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை" என்னும் தலைப்பில் அவர் ஆய்வு செய்து எழுதிய நூல், "பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி இதுவரை எழுதப்பட்டவை அனைத்தையும் பலவகையிலும் விஞ்சிநிற்கின்றது" என்று ஐரோப்பியத் திராவிடவியல் பேரறிஞராகிய கமில் சுவலபில் மதிப்பீடு செய்துள்ளார். 1953-ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தால் முதலில் வெளியிடப்பெற்ற இந்நூல் பலபதிப்புகளைக் கண்டு, இன்றும் தமிழ் ஆய்வில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டவர்க்கு ஏற்றதோர் அறிமுக நூலாக விளங்குகின்றது.

உலகத் தமிழ்த் தூதுப் பயணம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது தமிழின் சிறப்பை ஆய்ந்தறிந்த அடிகளார், அதை உலக அரங்கில் எடுத்துோதுவதைத் தமது தலையாய கடமை என்று உணர்ந்தார். ஆகவே, 1949-50-ஆம் ஆண்டுகளில் உலகப் பயணத்தை மேற்கொண்டு தமிழ்த்தூது நிகழ்த்தினார். அவ்வமயம் ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், பெரு, மெக்சிகோ, ஈகுவடார், இத்தாலி முதலிய பல நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தினார். அமெரிக்காவில் மட்டும் தமிழின் சிறப்பைப் பற்றி ஒரே ஆண்டில் 200 விரிவுரைகள் ஆற்றினார். அவரது அற்புதமான ஆய்வுரைகள் ஏற்கனவே இந்தியவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த பல மேனாட்டு அறிஞர்களின் கண்களைத் திறந்தன. அவர்களுள் பலரைத் தமிழாய்வில் ஈடுபடஊக்குவித்த அடிகளார், பல்வேறு மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை அமைந்திடவும் வழி வகுத்தார்.

இவ்வாறு இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உலக அரங்கில் பல நாடுகளிலும் தமிழாய்வு நடைபெற வழிவகுத்த பெருமை அடிகளாருக்கே உரியது. இந்திய நாகரிகத்தின் முழுமையையும், இலக்கியச் செழுமையையும் உரிய முறையில் ஆராய்ந்து அறிவதற்கு வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு அடிகளார் உணர்த்தினார்.

'Tamil Culture' இதழின் வரலாற்றுப் பங்களிப்பு

தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது, அவை ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டால்தான் உலக அரங்கினைச் சென்றடையும். அதற்கு ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது அவசியம் என்பதைத் தம் உலகத் தமிழ்த் தூதுப் பயணத்தின்போது அடிகளார் உணர்ந்தார். இத்தேவையை நிறைவு செய்ய 1952-ம் ஆண்டில் "Tamil Culture" என்னும் ஆங்கில முத்திங்கள் இதழ் தொடங்கினார். இது தனியொருவர் மேற்கொண்ட தனிப் பெரும் முயற்சி என்பது மட்டுமல்ல, 12 ஆண்டுகளுக்குப்பின் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்ற வழிவகுத்ததும் ஆகும். மேனாட்டு அறிஞர்களும் இந்திய, இலங்கைத் தமிழறிஞர்களும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வந்த இவ்விதழ், பல மேனாட்டுப் பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இடம் பெற்ற சிறப்புக்குரியதாகும். இவ்விதழில் 19 ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய பேரா.கமில் சுவலபில்தான் அனைத்துலகத் திராவிடவியல் அறிஞர்கள் மன்றம் நிறுவப்பட வேண்டும் என்னும் கருத்தை இவ்விதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் முன்வைத்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் பின்னர் தோன்றுவதற்கு ஒரு வகையில் வழிவகுத்தார்.

‘Tamil Culture’ வெளியீடு நிறுத்தப்பட்ட பின்பு அடிகளாரின் முயற்சியில் அவரையே தலைமை இதழாசிரியராகக் கொண்ட "Journal of Tamil Studies" வெளியிடப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இவ்விதழ் அந்நிறுவனத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

தமிழ் சார்ந்த எல்லாத் துறைகளுமே தமிழ் ஆய்வுக்கு உட்பட்டவைதாம் என்பதைத் தம் இதழ் மூலம் அடிகளார் வலியுறுத்தி வந்தார். பிற நாட்டு இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அடிகளாரின் எம்.லிட், பட்டஆய்வேடும் திருவள்ளுவர் பற்றி அவர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும் இத்துறையில் அடிகளாரின் ஈடுபாட்டைத் தெளிவாக விளக்குகின்றன.

பழந்தமிழ் அச்சு நூல்களை மீட்டெடுத்தல்

தமது முதல் தமிழ்த் தூதுப் பயணத்தை அடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் பல தமிழ்த் ஆய்வுப் பயணங்களை அடிகளார் மேற்கொண்டார். அவ்வமயங்களில் ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வு செய்து தமிழில் முதன் முதலாக வெளியிடப் பெற்ற கார்த்திலியா (1554), தம்பிரான் வணக்கம் (1578), கிரிசித்தியானி வணக்கம் (1579), அடியார் வரலாறு போன்ற பல நூல்களை அவர் கண்டுபிடித்துத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தினார். அவ்வாறே, 1679-ஆம் ஆண்டு அச்சிடப் பெற்ற தமிழ்-போர்த்துகீசேய அகராதியையும் கண்டுபிடித்து, அதனை மறுபதிப்பாக 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் போது வெளியிட்டார். அடிகளாரின் முயற்சி இல்லையெனில், முதலில் அச்சேறிய இவ்வரிய தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். இந்நூல்கள் அனைத்துமே இன்று மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. அவைபற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பண்பாட்டு உறவுகளும் பன்மொழிப் புலமையும்

உரோமை, கிரேக்க பேரரசுகளுடன் பழந்தமிழகம் கொண்டிருந்த வாணிப உறவுகளை நாம் அறிவோம். ஆனால், கிழக்காசிய நாடுகளுடன் அன்றையத் தமிழகம் கொண்டிருந்த அரசியல் உறவு காரணமாகப் பண்பாட்டு உறவும் ஏற்பட்டது என்பதை அடிகளார்தாம் ஆராய்ந்து வெளிப்படுத்தினார். தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின்போது திருவாசகம் ஓதப்படுவதையும், கம்போடியக் கோவில்களில் திராவிடக் கலையின் தாக்கம் காணப்படுவதையும் அடிகளார் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே கம்போடிய, தாய்லாந்து நாடுகளின் மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்த்துகேயம், ஸ்பானிஷ் ஆகிய பல மொழிகளைக் கற்றிருந்த அடிகளார், அம்மொழி பற்றி ஆய்வுரை நிகழ்த்தவும், ஆய்வுக்கட்டுரை வடிக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார். இதனாலேயே மேலைநாடுகளில் தமிழின் சிறப்பைப் பரப்பிட அவரால் இயன்றது எனலாம். தங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ் பற்றிய ஆய்வுரை நிகழ்த்துமாறு பல ஐரோப்பிய அறிஞர்கள் அடிகளாரை அழைத்துச் சிறப்பித்தனர்.

பாரிஸ் நகரில் உள்ள பிரான்சு கல்லூரியிலும் இத்தாலிய நாட்டு நேப்பிள்ஸ் நகரில் உள்ள கீழ்த்திசை ஆய்வு நிறுவனத்திலும் அவர் பல திங்கள் தங்கிச் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராக எட்டு ஆண்டுக்காலம் பணிபுரிந்த அவர் பல புதிய துறைகளில் அப்பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிகோலினார். பிறரை அவ்வாறு ஆய்வு செய்யத் தூண்டித் துணைபுரிந்த அடிகளார், தாமும் தொல்காப்பியம், திருக்குறள், தமிழ்ப்பண்பாடு, தமிழர் வாணிபம், பழந்தமிழகத்தில் கல்வி, குவாடலூபே மார்ட்டீனிக் தீவுகளில் தமிழர் குடியேற்றம் ஆகிய பொருள் பற்றி ஆய்வு நிகழ்த்தினார். அவ்வாய்வுகள் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளிவந்தன. அந்தாம் தெ ப்ரேயென்சா அடிகள் இயற்றிய தமிழ் - போர்த்துகீசேய அகராதியின் மறுபதிப்புக்குத் தனிநாயகம் அடிகளார் எழுதியுள்ள அரிய ஆய்வுரை அறிஞருலகத்தின் பாராட்டினைப் பெற்றதாகும். இப்படிப் பல்வேறு பணிகள்மூலம், தரணியெங்கும் தமிழ் வளர்ப்பதில் அடிகளாரின் பங்கு தனிச் சிறப்புடையதாகும்.